அ. ஆர்வத்துக்கென்று ஒரு மூலை ஏன்?
குழந்தைகள் கேள்வி கேட்கும்போது ஊக்குவிப்பதோடு, அந்தக் கேள்விகளைத் தொடர்ந்து ஆராய ஓர் இடத்தையும் உருவாக்க வேண்டும் என்று சம்ஸ்காரா அகாடமியில் நம்புகிறோம். அறிவியலும் கணிதமும் சிறு மனங்களில் வியப்பைத் தூண்ட வேண்டும் என்பதற்காக அப்படி உருவான இடம்தான் கியூரியஸ் மூலை.
எங்கள் நடுநிலைப் பள்ளியில், குறிப்பாக 6, 7, 8ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான முயற்சி இது. அறிவியல், கணித ஆசிரியர்கள் ஆர்வத்துடன் இதை வடிவமைத்து நடத்துகிறார்கள். சமையலறையில், பேருந்துப் பயணத்தில், ஒரு பந்து துள்ளுவதில், பணத்தை எண்ணுவதில் என எங்கெல்லாம் அறிவியலையும் கணிதத்தையும் காணலாம் என்பதை மகிழ்ச்சியுடன் குழந்தைகள் கண்டறிகிறார்கள். நோட்டுப் புத்தகத்திலிருந்து நிமிர்ந்து பார்த்தால், அன்றாட உலகம் இயங்குவதில் இந்த இரு பாடங்களுக்கும் எவ்வளவு பங்கு இருக்கிறது என்று தெரியத் தொடங்குகிறது.
ஆ. பாடப்புத்தகத்துக்கு வெளியே அறிவியலும் கணிதமும்
மேல் வகுப்புகளுக்குச் செல்லும்போது கணிதமும் அறிவியலும் கடினமானவை என்றோ, தங்கள் வாழ்க்கைக்குச் சம்பந்தமில்லாதவை என்றோ சில குழந்தைகளுக்குத் தோன்றுகிறது. அந்த அச்சம் வேரூன்றும் முன்பே அதைக் களைய எங்கள் பள்ளி மேற்கொண்ட முயற்சி கியூரியஸ் மூலை.
குழந்தைகள் தாங்களே செய்து பார்க்கும் செயல்பாடுகள், வாழ்க்கையில் அவற்றின் பயன்பாடுகள், எளிமையாக விளக்கப்படும் கருத்துகள் ஆகியவற்றின் வழியாக இந்தப் பாடங்கள் பழக்கமாகின்றன. அறிவியலும் கணிதமும் சுற்றிலும் இருப்பதையும், தங்களுடைய செயல்களிலேயே அவை வெளிப்படுவதையும் குழந்தைகள் உணர்கிறார்கள்.
உருளும் பந்தைப் பார்த்து இயக்கத்தைப் புரிந்துகொள்வது, ஒரு குவளை எலுமிச்சைப் பானத்தில் வேதியியலைக் கண்டறிவது எனப் பழகப் பழக, இந்தப் பாடங்கள் குழந்தைகளுக்கு நெருக்கமாகின்றன. 9, 10ஆம் வகுப்புகளை எட்டும்போது கணிதத்திலோ அறிவியலிலோ வரும் சவாலைத் தாங்களே முயன்று விடை காணக்கூடிய ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்பதே நோக்கம்.
இ. வியப்புக்கு வாரந்தோறும் நேரம்
சம்ஸ்காராவின் வார அட்டவணையிலேயே கியூரியஸ் மூலைக்கு இடமுண்டு. வாரத்தில் நான்கு நாள்கள் அமர்வுகள் நடைபெறுகின்றன. 6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.
வெவ்வேறு வயதிலுள்ள மாணவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளும் வகையில் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வோர் அமர்விலும் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகியவை ஒன்றிணைகின்றன. குழந்தைகளுக்கு அவை ஆராய்ந்து விடை காண வேண்டிய புதிர்களாக அறிமுகமாகின்றன.
ஆசிரியர்கள் பரிசோதனைகள், செயல்விளக்கங்கள், அன்றாட எடுத்துக்காட்டுகள், விளையாட்டான சிந்தனைப் பயிற்சிகள் ஆகியவற்றைக் கொண்டுவருகிறார்கள். மாணவர்கள் தங்கள் கேள்விகளையும் கவனித்தவற்றையும் பகிர்ந்து, அவற்றுக்கிடையே தாங்கள் கண்ட தொடர்புகளைச் சொல்கிறார்கள். உடனே சரியான விடையைச் சொல்ல வேண்டுமென்ற பதற்றமின்றி உற்றுக் கவனிக்கவும், வியக்கவும், கண்டறியவும் இங்கே நேரமுண்டு.
ஈ. பதற்றமின்றிக் கற்கவும் துணிந்து ஆராயவும்
இங்கே தேர்வு, மதிப்பெண், தரவரிசை எதுவும் கிடையாது. தங்களுக்குத் தோன்றியதை முயன்று பார்க்கக் குழந்தைகளுக்குச் சுதந்திரம் உண்டு. தவறிவிடுமோ என்ற அச்சம் குறையும்போது இயல்பாகக் கற்க முடிகிறது. நாளடைவில் அந்தத் தன்னம்பிக்கை வழக்கமான வகுப்புகளிலும் வெளிப்படுகிறது.
மற்ற இடங்களில் கேட்கத் தயங்கும் “ஏன்?”, “எப்படி?” போன்ற கேள்விகளை இங்கே குழந்தைகள் கேட்க முடிகிறது. பாடத்திட்டப்படி ஒரு கருத்தில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டத்துக்கு முன்பே அதனுடன் பழகிவிடுகிறார்கள். கட்டாயம் குறைந்து விளையாட்டாக ஆராய இடம் கிடைப்பதுதான் இந்த மாற்றத்துக்குக் காரணம்.
உ. சிறுவயதில் தொடங்கி வாழ்நாள் முழுவதும் தொடரும் பழக்கம்
அறிவியலிலும் கணிதத்திலும் நல்ல மதிப்பெண்கள் பெறக் கற்பிப்பதோடு, உலகைப் புரிந்துகொள்ள இந்தப் பாடங்களைப் பயன்படுத்தவும் சம்ஸ்காராவில் உதவுகிறோம். ஒரு புதிருக்கு விடை கண்ட மகிழ்ச்சி, தொடரும் ஓர் ஒழுங்கைக் கண்டுபிடித்த உற்சாகம், ஒரு பொருள் எப்படி இயங்குகிறது என்று புரிந்த நிம்மதி ஆகியவற்றைக் குழந்தைகள் இங்கே அனுபவிக்கிறார்கள்.
காலப்போக்கில் பாடத்தில் வளரும் தன்னம்பிக்கை, காரணங்களை ஆராய்ந்து சிந்திக்கும் பழக்கமாக மாறுகிறது.
ஓர் அமர்வில் “ஓ! அதனால்தான் இப்படி நடக்கிறதா!” என்று ஒரு குழந்தை சொல்லும் தருணம் உண்டு. ஒரு பாடத்தை முடித்துவிட்டோம் என்பதைக் காட்டிலும் அந்தக் குழந்தையின் முகத்தில் தெரியும் புரிதல் எங்களுக்கு மதிப்புமிக்கது.
