அனைத்துப் பதிவுகள்

கதைகளுடன் வளர்கிறார்கள்: சம்ஸ்காராவின் வகுப்புக் கதைகள்

ஒவ்வோர் ஆண்டும் ஒரு கதை விரிவதுபோலக் கற்றலும் விரிகிறது. மாண்டிசோரி மரபில், ஒவ்வொரு வகுப்புக்குமான கதைகள் குழந்தைகள் கற்கும் விஷயங்களுக்கு இடையே எப்படித் தொடர்பை உருவாக்குகின்றன?

படப் புத்தகங்களும் விளையாட்டுப் பொருட்களும் வைக்கப்பட்ட அலமாரியை மாணவர்கள் பார்வையிடுகிறார்கள்.

அ. மாண்டிசோரி கல்வியில் வகுப்புக் கதைகளுக்கு என்ன இடம்?

சம்ஸ்காரா அகாடமியில் கற்பது, ஆண்டுக்கு ஆண்டு விரியும் ஒரு கதைக்குள் அடியெடுத்து வைப்பதுபோல் இருக்கிறது. பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ளும் பயணமாகக் கல்வியைப் பார்க்கும் மாண்டிசோரி மரபை நாங்கள் இப்படி நடைமுறைப்படுத்துகிறோம். ஒவ்வொரு வகுப்பிலும் சொல்லப்படும் கதைகள் இந்தப் பயணத்தின் மையமாக இருக்கின்றன. அவை குழந்தைகளை வழிநடத்துவதுடன், வகுப்பறையை விட்டு வெளியேறிய பின்பும் நினைவில் தங்கும் வகையில் முக்கியக் கருத்துகளை அறிமுகப்படுத்துகின்றன.

ஒருமுறை கேட்டுவிட்டு மறந்துபோகும் கதைகளா இவை? ஒவ்வோர் ஆண்டும் இவற்றுக்குத் திரும்புகிறோம். சிக்கலான கருத்துகளையும் புரிந்துகொள்ளும் வயது வரும்போது, அதே கதைகள் மாணவர்களுக்குப் புதிய பொருள் தருகின்றன. சிறுவயதில் விரும்பிப் படித்த புத்தகத்தைப் பெரியவரான பிறகு மீண்டும் படிக்கும்போது, முன்பு கவனிக்காதவை கண்ணில் படுவதுபோலத்தான்.

ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலான எங்கள் தொடக்கக் கல்வித் திட்டத்தில், குழந்தைகள் ஐந்து அடிப்படைக் கதைகளை அறிந்துகொள்கிறார்கள். ஒவ்வொரு கதையும் கவனமாக உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் எளிமையாகச் சொல்லப்படும் இக்கதைகள், குழந்தைகளின் புரிதல் வளர வளர, கூடுதல் நுணுக்கங்களுடன் மீண்டும் சொல்லப்படுகின்றன.

பிரபஞ்சம் எவ்வளவு பெரியது, அதில் நமக்கு என்ன இடம் என்பதைக் குழந்தைகள் உணர உதவும் கதைகளிலிருந்து தொடங்குகிறோம். அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்லும்போது அதே கதையில் மேலும் விவரங்கள் சேர்கின்றன. ஒவ்வொரு குழந்தைக்கும் அதனுடன் தனிப்பட்ட தொடர்பும் ஏற்படுகிறது. பெருவெடிப்பின் கதையை வியப்புடன் கேட்கும் ஒன்றாம் வகுப்புக் குழந்தை, ஐந்தாம் வகுப்பில் அதே நிகழ்வை அறிவியலின் வழியாக ஆராயலாம்; அதன் பொருள் குறித்துத் தத்துவக் கேள்விகளையும் எழுப்பலாம்.

ஆ. பெருவெடிப்பிலிருந்து உயிரின் தோற்றம் வரை விரியும் கதைகள்

எங்கள் பாடத்திட்டத்தின் அடிப்படையான ஐந்து கதைகளும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு அழகாகத் தொடர்கின்றன. குழந்தைகள் ஒவ்வோர் ஆண்டும் அதே கதைகளுக்குள் மேலும் ஆழமாகச் செல்கிறார்கள். அவற்றைப் பற்றிய புரிதல் மட்டும் அவர்களின் வளர்ச்சிக்கேற்ப பெரிதும் மாறுகிறது.

இந்தப் பயணம் பெருவெடிப்பின் கதையில் தொடங்குகிறது. ‘இது எப்படித் தொடங்கியது?’ என்ற கேள்வி சிறு குழந்தைகளை இயல்பாகவே ஈர்க்கிறது. பிரபஞ்சமே பிறந்த கதையைவிடப் பெரிய தொடக்கம் வேறு எது? இந்தக் கதை காலமும் விண்வெளியும் எவ்வளவு பரந்தவை என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. பின்னர் வரும் கதைகளுக்கும் அடித்தளம் அமைக்கிறது.

குழந்தைகள் வளரும்போது பூமியில் உயிர் தோன்றிய கதைகளுக்குச் செல்கிறோம். முதல் ஓரணு உயிரினங்களில் தொடங்கி இன்று நம்மைச் சுற்றியுள்ள சிக்கலான சூழலமைப்புகள் வரை அறியும்போது, மற்ற உயிர்களோடு தங்களுக்குள்ள தொடர்பைக் குழந்தைகள் உணர்கிறார்கள். தாவரங்களும் விலங்குகளும் எப்படி வந்தன என்ற எளிய வியப்பு, பரிணாமம், சூழலுக்கேற்ப உயிரினங்கள் மாறுவது, சுற்றுச்சூழலைப் பேணும் பொறுப்பு ஆகியவை பற்றிய ஆழ்ந்த உரையாடலாக வளர்கிறது.

மேல் வகுப்புகளில் இந்தக் கதைகளை வைத்துப் பல புதிய கேள்விகளை ஆராயலாம். வெவ்வேறு உயிரினங்கள் எவ்வாறு ஒன்றையொன்று சார்ந்துள்ளன? பரிணாமம் எப்படிச் செயல்படுகிறது? பூமியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மனிதர்களின் பங்கு என்ன? மீண்டும் கேட்கும் கதையில் சலிப்பு ஏற்படுவதில்லை. ஒவ்வொரு முறையும் புதிதாக ஏதாவது சொல்லும் பழைய நண்பரைச் சந்திப்பதுபோல் இருக்கிறது.

இ. ஜூன் முதல் ஜூலை வரை: கதைகளுடன் தொடங்கும் கல்வியாண்டு

சம்ஸ்காராவில் ஒவ்வொரு கல்வியாண்டும் எதிர்பார்ப்புடன் தொடங்குகிறது. ஜூன் மாதம் முடிந்து ஜூலை பிறக்கும்போது, ஏற்கெனவே கேட்ட கதைகளைத் தங்கள் புதிய வயதுக்கும் புரிதலுக்கும் ஏற்ற முறையில் மீண்டும் கேட்க மாணவர்கள் கூடுகிறார்கள்.

இந்தத் தொடக்க வாரங்கள் கடந்த ஆண்டின் கற்றலுக்கும் புதிய ஆண்டுக்கும் இடையே ஒரு தொடர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தெரிந்த கதைக்குத் திரும்புவதில் குழந்தைகளுக்கு ஓர் ஆறுதல் இருக்கிறது. அதிலேயே புதிதாக ஒன்றைக் கண்டுபிடிப்பதில் உற்சாகமும் இருக்கிறது. பெருவெடிப்பின் கதையை ஒன்றாம் வகுப்பில் கண்கள் விரியக் கேட்ட குழந்தை, ஐந்தாம் வகுப்பில் ‘இதை விஞ்ஞானிகள் எப்படி அறிந்தார்கள்? இதற்கு என்ன பொருள்? இவ்வளவு பரந்த விண்வெளியை எண்ணும்போது எனக்கு எப்படி இருக்கிறது?’ என்று கேட்கலாம்.

இப்படி மீண்டும் வந்து பார்ப்பது குழந்தைகளுக்கு ஒரு பிடிப்பைத் தருகிறது. முன்பு கற்றதை அடித்தளமாகக் கொண்டு, பழக்கமான கருத்தையே இன்னும் தெளிவாகப் பார்க்கப் பழகுகிறார்கள். இந்தத் திரும்பப் பயிலும் பழக்கம் மூளையில் கற்றலுக்கான தொடர்புகளை வலுப்படுத்தி, புதிதாக அறிந்ததை ஏற்கெனவே தெரிந்ததோடு இணைக்க உதவுகிறது. அந்த அனுபவம் பாடங்களைத் தாண்டியும் துணை நிற்கிறது.

அறிவை வளர்ப்பதோடு இந்தக் கதைகள் கேள்வி கேட்டு ஆராயும் திறனுக்கும் படைப்பாற்றலுக்கும் இடமளிக்கின்றன. நேரடியாகப் பார்க்க முடியாத ஒரு கருத்தைக் கதையுடன் இணைத்துப் புரிந்துகொள்ளும்போது, அதை வெவ்வேறு கோணங்களில் பார்க்கும் திறன் வளர்கிறது. அறிவியலின் உண்மைகளுக்கும் சூத்திரங்களுக்கும் பின்னால் மனிதர்களின் வியப்பும் ஆர்வமும் கண்டுபிடிப்புகளும் இருக்கின்றன என்பதை மாணவர்கள் அறிகிறார்கள்.

ஈ. வகுப்புக் கதைகள் தரும் வாழ்க்கைப் பாடங்கள்

கதைகள் சொல்லும் தகவல்களுக்கு அப்பால், வாழ்க்கைக்கு உதவும் சில பண்புகளையும் குழந்தைகள் அவற்றின் வழியாக இயல்பாகக் கற்றுக்கொள்கிறார்கள். சிரமத்திலிருந்து மீண்டு வருதல், பிறரின் நிலையில் தன்னை வைத்துப் பார்த்தல், தன்னைப் பற்றிச் சிந்தித்தல் ஆகியவை அவற்றில் சில.

வாயு மேகங்கள் சுருங்கி விண்மீன்கள் உருவானதையும், தொடக்க காலப் பூமியின் கடுமையான சூழலில் உயிர் தோன்றியதையும் அறியும் மாணவர்கள் விடாமுயற்சி பற்றியும் சிந்திக்கிறார்கள். சவால்களுக்கு நடுவிலும் வளர்ச்சி ஏற்படலாம்; ஓர் இடறல் நிரந்தரமானதல்ல; கடினமான சூழலிலிருந்தும் வியப்பூட்டும் ஒன்று தோன்றலாம். பாடத்திலோ சொந்த வாழ்விலோ சிரமங்களை எதிர்கொள்ளும்போது இந்தக் கதைகள் நினைவுக்கு வரலாம்.

உயிர்களுக்கு இடையே உள்ள தொடர்புகளைப் புரிந்துகொள்ளும்போது பிறர் மீதான பரிவும் வளர்கிறது. உயிரினங்கள் எப்படிப் பரிணமித்தன, சூழலுக்கு ஏற்ப எப்படித் தகவமைத்துக்கொண்டன என்று ஆராயும் குழந்தைகள், தாங்களும் அந்த உறவுகளின் வலையில் ஓர் அங்கம் என்பதை உணர்கிறார்கள். மிகச் சிறிய பாக்டீரியா முதல் மிகப் பெரிய பாலூட்டி வரை ஒவ்வோர் உயிரினத்துக்கும் பூமியில் உயிர்கள் நிலைப்பதில் ஒரு பங்கு உண்டு. எல்லா உயிர்களையும் மதிக்கவும் சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பேற்கவும் இந்தப் புரிதல் உதவுகிறது.

தங்கள் கற்றலைத் திரும்பிப் பார்ப்பதும் இந்தக் கதைகள் தரும் முக்கிய வாய்ப்பு. ஆண்டுதோறும் ஒரே கதையைக் கேட்கும்போது, அதைப் பற்றிய தங்கள் புரிதல் எவ்வளவு ஆழமாகியிருக்கிறது என்பதை மாணவர்களே கவனிக்கிறார்கள். முன்பு கடினமாகத் தோன்றிய கருத்தைப் புரிந்துகொள்வதிலும், நுட்பமான கேள்வியைக் கேட்பதிலும், இரண்டு கருத்துகளுக்குள் புதிய தொடர்பைக் காண்பதிலும் தங்கள் வளர்ச்சியை அறிகிறார்கள். தன்னைப் பற்றிய இந்த விழிப்புணர்வு வாழ்நாள் முழுவதும் கற்கத் துணை நிற்கும்.

உ. தனிமனித வளர்ச்சியில் கதைகளின் நீடித்த தாக்கம்

வகுப்புக் கதைகளின் தாக்கம் தொடக்க வகுப்போடு முடிந்துவிடுவதில்லை. மாணவர்கள் மேல்நிலைக் கல்விக்குச் செல்லும்போதும், பின்னர் பெரியவர்களாகும்போதும், இக்கதைகளில் கற்றவை அவர்கள் உலகைப் பார்க்கும் விதத்திலும் எடுக்கும் முடிவுகளிலும் தொடர்ந்து பங்களிக்கின்றன.

கல்வி குழந்தையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் சம்ஸ்காராவின் அணுகுமுறையை வடிவமைத்திருக்கிறோம். பள்ளியின் இணையதளத்தில் கூறியபடி, ‘கற்றலின் மீது அன்பை’ வளர்த்து, குழந்தைகள் ‘வாழ்நாள் முழுவதும் ஆர்வத்துடனும் படைப்பாற்றலுடனும் தன்னம்பிக்கையுடனும் கற்பவர்களாக’ வளர உதவ விரும்புகிறோம். வகுப்புக் கதைகள் இந்தப் பணியில் முக்கியமானவை. பிரபஞ்சத்தில் தங்களுக்குள்ள இடம், மற்ற உயிர்களுடனான தொடர்பு, உலகிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பைச் செய்யும் பொறுப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்ள அவை ஒரு வழி தருகின்றன.

பிரபஞ்சத்தின் கதையில் தொடங்கிய கற்றல் வாழ்நாள் முழுவதும் தொடரும் பயணம் என்பதை மாணவர்கள் அறிகிறார்கள். பள்ளியின் கல்விப் பார்வையும் அதுதான். வழக்கமான பாடங்களுடன் நாடகம், கலை மற்றும் கைவினை மன்றங்கள், ‘வீவர்ஸ் கிராஃப்ட்’, ‘டிராவலிங் பேஜஸ்’ போன்ற நிகழ்ச்சிகள் வழியாகவும் பல அனுபவங்களை வழங்குகிறோம். இந்த வாய்ப்புகளும் வகுப்புக் கதைகள் தரும் அடிப்படைப் புரிதலும் சேர்ந்து, தேர்வுகளையும் மதிப்பெண்களையும் தாண்டி நோக்கத்துடன் வாழ மாணவர்களைத் தயார்படுத்துகின்றன.

சம்ஸ்காராவின் வகுப்புக் கதைகள் மாணவர்களைக் கற்கத் தூண்டுகின்றன. தாங்களும் பிரபஞ்சத்தின் ஓர் அங்கம், வாழ்வின் நீண்ட கதையில் தங்களுக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை அவர்கள் உணர உதவுகின்றன. தங்கள் ஆளுமையை உருவாக்கிக்கொண்டு, மனிதர்கள் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்ற தொடர்கதையில் தங்கள் சொந்த அத்தியாயங்களை எழுத இந்தப் புரிதல் ஓர் அடித்தளமாகிறது.