அ. தினக் குறிப்பேடு எழுதுவது ஏன் முக்கியம்?
தொடக்கப் பள்ளியில் உருவாகும் பழக்கங்கள் வாழ்நாள் முழுவதும் கற்க உதவுகின்றன என்று சம்ஸ்காரா அகாடமியில் நம்புகிறோம். தினக் குறிப்பேடு எழுதுவது அப்படிப்பட்ட ஒரு பழக்கம். தாங்கள் எப்படிக் கற்கிறோம் என்பதை உணரவும், தங்கள் வேலைக்குப் பொறுப்பேற்கவும் அது மாணவர்களுக்கு உதவுகிறது. பல முற்போக்குப் பள்ளிகளிலும் குழந்தைகள் தினமும் செய்த வேலைகளைப் பதிவு செய்து, முன்னேற்றத்தைப் பார்த்து, தங்கள் அனுபவங்களைப் பற்றி சிந்திக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
எந்தக் கற்றல் பொருளைத் தேர்ந்தெடுத்தோம், என்ன பயிற்சியை முடித்தோம், எந்த வகுப்பில் கலந்துகொண்டோம் என்று எழுதும்போது, தங்கள் கற்றலைத் தாங்களே கவனிக்கக் குழந்தைகள் பழகுகிறார்கள். லியனார்டோ டா வின்சி உள்ளிட்ட சிந்தனையாளர்கள் தங்கள் எண்ணங்களையும் பரிசோதனைகளையும் குறிப்பேடுகளில் நுணுக்கமாகப் பதிவு செய்தார்கள். நாள்தோறும் செய்யும் சிறிய பதிவுகள் காலப்போக்கில் பெரிய சாதனைகளுக்கு எப்படி வித்திடுகின்றன என்பதை அவை காட்டுகின்றன. சம்ஸ்காராவிலும் தொடர்ந்து எடுத்து வைக்கும் சிறு அடிகள் தங்களுடைய வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றத்தைக் குழந்தைகள் கவனிக்கிறார்கள்.
ஆ. தொடக்க வகுப்புகளில் குறிப்பேட்டைப் பயன்படுத்துவது எப்படி?
எங்கள் வகுப்பறைகளில் பள்ளிச் செயல்பாடுகளைப் பதிவு செய்ய மாணவர்களுக்கு ஒரு குறிப்பேடு உண்டு. பொதுவாக ஒவ்வொரு பதிவிலும் தேதி, நேரம், செய்த வேலை ஆகியவற்றை எழுதுவார்கள். ஒரு குழந்தையின் குறிப்பேட்டில் இப்படி இருக்கலாம்.
- காலை 8:45 மணிக்குக் கணிதப் பயிற்சிக்கான பொருளைத் தேர்ந்தெடுத்தேன். 9:15 மணிக்குப் பயிற்சிகளை முடித்தேன்.
- காலை 10:15 முதல் 10:20 வரை மொழி வகுப்பில் கலந்துகொண்டேன்.
- காலை 10:20 முதல் 10:40 வரை உடற்கல்வி அல்லது உடற்பயிற்சியில் ஈடுபட்டேன்.
இவ்வாறு எழுதும்போது மாணவர்கள் தங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கவும், சில வேலைகள் எப்படி மீண்டும் மீண்டும் வருகின்றன என்பதைக் கவனிக்கவும், முடிக்காத வேலையைப் பின்னர் தொடரக் குறித்துக்கொள்ளவும் முடிகிறது. ஆசிரியர்களும் குறிப்பேடுகளைப் பார்த்து ஒவ்வொரு குழந்தையின் கற்றலைப் புரிந்துகொள்கிறார்கள். தொடர வேண்டிய வேலைகளைக் கவனித்து, அதற்கேற்ற வழிகாட்டுதலை வழங்குகிறார்கள்.
தினமும் குறிப்பேடு எழுதுவதால் நேரத்தைத் திட்டமிடுவது, கவனத்தை ஒருமுகப்படுத்துவது, சுய ஒழுக்கத்துடன் செயல்படுவது ஆகிய திறன்கள் வளர்கின்றன. இவை வகுப்பறைக்கு வெளியேயும் பயன்படுகின்றன.
இ. செயல்விளக்கத்தையும் குறிப்பேட்டையும் இணைப்பது
சம்ஸ்காராவில் புதிய கருத்துகளை அறிமுகப்படுத்த ஆசிரியர்கள் செயல்விளக்கம் அளிக்கிறார்கள். பலகைகள், விளக்கப்படங்கள், பரிசோதனைகள், காலவரிசைகள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு சிறு குழுவுக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படுவதால் மாணவர்கள் கவனத்துடன் பங்கேற்க முடிகிறது. அவர்கள் பொருள்களைக் கையாண்டு கருத்தைச் செயல்படுத்திப் பார்த்து, தங்கள் முன்னேற்றத்தைப் பதிவு செய்கிறார்கள். எந்தக் கருத்து அல்லது பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை ஆசிரியர் குறிப்பேட்டில் அதற்குரிய தாளில் எழுதுகிறார். ஒவ்வொரு குழந்தைக்கும் எது அறிமுகமாகியுள்ளது என்பதை ஆசிரியர் தெரிந்துகொள்ளலாம். குழந்தையும் அதைப் பார்த்து அன்றைய வேலைகளைத் திட்டமிட்டு, அடுத்து என்ன பயிற்சி செய்யலாம் என்று தேர்ந்தெடுக்கலாம்.
ஈ. ஐந்து ஆண்டுகளில் குறிப்பேடு வளரும் விதம்
முதல் வகுப்பிலேயே குறிப்பேடு தொடங்குகிறது. நேரத்தை அறியக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் அன்றைய வேலைகள், மதிய உணவு நேரம், உடற்பயிற்சி ஆகியவற்றைப் பற்றி எழுதத் தொடங்குகிறார்கள். வயது கூடும்போது வெளியே சென்று கற்பதற்கான திட்டங்கள், ஆசிரியருடன் நடக்கும் கலந்துரையாடல்கள், தங்களுக்குத் தாங்களே எழுதிக்கொள்ளும் சிறு நினைவூட்டல்கள் ஆகியவற்றையும் சேர்க்கிறார்கள்.
தொடக்கப் பள்ளியின் ஐந்து ஆண்டுகளிலும் இந்தப் பழக்கம் தொடர்கிறது. நடந்ததைத் திரும்பிப் பார்க்கவும், திட்டமிடவும், வேலைகளை ஒழுங்குபடுத்தவும் அது துணைபுரிகிறது. சிறியவர்கள் எழுதிய சொற்களுக்குப் பக்கத்தில் படம் வரையலாம். பெரியவர்கள் தங்கள் கற்றல் அனுபவத்தைப் பற்றி விரிவாக எழுதலாம். ஒவ்வோர் ஆண்டின் அனுபவமும் அடுத்த ஆண்டுக்கு அடித்தளமாகிறது. குழந்தையுடன் சேர்ந்து தன்னைப் புரிந்துகொள்ளும் திறனும் பொறுப்புணர்வும் வளர்கின்றன.
உ. வாழ்நாள் முழுவதும் பயன்படும் திறன்கள்
கவனிப்பது, சிந்திப்பது, தன் முன்னேற்றத்தைப் பதிவு செய்வது ஆகிய பழக்கங்களைக் குறிப்பேடு வளர்க்கிறது. அவற்றின் வழியாகக் குழந்தைகள் பகுத்துச் சிந்திக்கவும், பொறுப்பேற்கவும், தன்னிச்சையாகச் செயல்படவும் பழகுகிறார்கள். தொடர்ந்து எழுதுவது தங்கள் எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்தவும், அனுபவங்களை ஆராயவும், முயற்சியால் ஏற்பட்ட பலனைத் தாங்களே காணவும் உதவுகிறது.
பிற்காலப் படிப்புக்கும் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் இவை அடிப்படையாக அமைகின்றன. தினமும் எழுதும் மாணவர்களுக்கு வேலைகளை ஒழுங்குபடுத்துவது, இலக்குகளைத் தேர்ந்தெடுப்பது, ஒரு சிக்கலைச் சற்றே நிதானித்துச் சிந்தித்து அணுகுவது ஆகியவை பழக்கமாகின்றன. தங்களைப் புரிந்துகொண்டு, சூழலுக்கு ஏற்றபடி மாறிக் கற்கவும் அது உதவுகிறது.
ஊ. நடைமுறையில் மாண்டிசோரி கல்வி
சுயமாகச் செயல்படுதல், தனக்கேற்ற வேகத்தில் கற்றல், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை வளர்த்தல் ஆகிய மாண்டிசோரி கொள்கைகளை சம்ஸ்காராவில் குறிப்பேட்டு வழக்கம் செயல்படுத்துகிறது. ஆசிரியரின் செயல்விளக்கம், கைகளால் செய்து பார்த்துக் கற்றல், தன் அனுபவத்தைப் பதிவு செய்தல் ஆகியவை இணைவதால் கல்வி, உணர்வு, தனிப்பட்ட வளர்ச்சி எனப் பல தளங்களில் குழந்தைக்கு ஆதரவு கிடைக்கிறது.
தினமும் தங்கள் வேலையைத் திரும்பிப் பார்க்கும் மாணவர்கள், அடுத்த முறை எதை மேம்படுத்தலாம் என்று சிந்திக்கப் பழகுகிறார்கள். மேல் வகுப்புகளிலும் அதற்குப் பிறகும் முன்னேற அந்தப் பழக்கம் அவர்களுக்குத் துணை நிற்கிறது.
