அனைத்துப் பதிவுகள்

சம்ஸ்காராவின் பள்ளிச் சீருடையை மாணவர்கள் வடிவமைத்த கதை

தினமும் சீருடை அணிபவர்களே அதன் வடிவமைப்பிலும் பங்கேற்றால் எப்படி இருக்கும்? சம்ஸ்காராவின் மாணவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து பள்ளிச் சீருடை உருவாகப் பங்களித்த கதை.

செங்கல் சுவர்களுள்ள பள்ளி நடைபாதை வழியாகக் குழந்தைகள் செல்கிறார்கள்.

சம்ஸ்காரா அகாடமியில் சீருடை என்பது பள்ளி விதிப்படி அணியும் உடைதான். அதே நேரத்தில், மாணவர்கள் தங்கள் ரசனையையும் கருத்துகளையும் வெளிப்படுத்த அதிலும் இடமுண்டு. கடந்த ஆண்டின் இறுதியில், பள்ளி ஆண்டு முடிவை நெருங்கிக்கொண்டிருந்தபோது, மாணவர்களிடையே ஓர் உற்சாகம் பரவியது. புதிய சீருடையை வடிவமைக்கும் நேரம் வந்துவிட்டது. இந்த முறை அந்தப் பொறுப்பு அவர்களுடையது.

சீருடை தயாரிப்பாளரைத் தொடர்புகொள்வது முதல் நிறங்கள், வடிவங்கள், சின்னஞ்சிறு நுணுக்கங்கள் வரை ஒவ்வொன்றையும் மாணவர்களே முன்னின்று கவனித்தார்கள். டிசம்பரில் ஒரு உரையாடலாகத் தொடங்கியது, விரைவில் எல்லாரும் சேர்ந்து மேற்கொண்ட திட்டமாக வளர்ந்தது. புதிய கல்வியாண்டு தொடங்கியபோது சீருடைகள் தயாராக இருந்தன. அவற்றில் குழந்தைகளின் தேர்வுகளும் தாங்கள் ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வும் தெரிந்தன.

அ. இந்த முறை மாணவர்கள் ஏன் பொறுப்பேற்றார்கள்?

முன்பெல்லாம் பள்ளி நிர்வாகமே சீருடையை வடிவமைத்தது. இந்த முறை ஒரு மாற்றத்துக்கு வழி செய்தவர்கள் மாணவர்கள்தான். எந்த உடை அணிய வசதியாக இருக்கிறது, அதன் தோற்றம் எப்படி இருக்கலாம் என்று அவர்களாகவே யோசனைகளை முன்வைத்தார்கள். ஒவ்வொரு குழந்தையின் விருப்பத்தையும் கருத்தில் கொண்டு, பார்க்கவும் அழகாக, அன்றாடம் அணியவும் வசதியாக ஒரு சீருடையை உருவாக்குவதில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்றார்கள்.

அந்தப் பொறுப்பை அவர்களிடம் கொடுத்தபோது, தங்களுக்கு என்ன தேவை என்பதைச் சொல்லவும், கற்பனையில் இருந்ததை உடையாக உருவாக்கிப் பார்க்கவும் அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. இறுதியில், எல்லாரும் மனதார ஏற்றுக்கொள்ளக்கூடிய சீருடை அமைய வேண்டும் என்பதே நோக்கம்.

ஆ. சீருடையின் நிறங்களும் வடிவங்களும்

மண்ணும் வானமும் நம்மைச் சுற்றியுள்ள இயற்கையும் சம்ஸ்காராவுக்கு எப்போதும் ஊக்கமளித்துள்ளன. பள்ளிக்கென்று ஒரு தனித்தன்மையைக் கொடுக்கும் அதன் நிறங்களும் பல ஆண்டுகளாக அதே அடையாளத்தைப் பேணிவந்துள்ளன. அந்த மரபைத் தொடரவே, புதிய சீருடைக்கும் பள்ளியின் இயற்கை சார்ந்த வண்ணங்களோடு பொருந்தும் நிறங்களைத் தேர்ந்தெடுத்தோம்.

வாரத்தின் நாள்களுக்கு ஏற்ப வடிவத்தில் சிறிது மாற்றம் இருக்கட்டும் என்று முடிவுசெய்தோம். சம்ஸ்காரா மாணவர்கள் நேர்த்தியான தோற்றத்தோடு அணிவதற்கு வசதியும் விரும்புகிறார்கள். திங்கள், வெள்ளிக்கிழமைகளுக்கு நீலச் சட்டைகளைத் தேர்ந்தெடுத்தோம். சாதாரண சட்டைக் காலரும், மாணவர்களுக்கு நிமிர்ந்து நிற்கும் சீனக் காலரும் உண்டு. இரண்டுமே நேர்த்தியான தோற்றத்தைக் கொடுக்கின்றன. செவ்வாய்க்கிழமைக்கு எளிமையான அடர் செந்நிற டி-ஷர்ட். அது சம்ஸ்காராவின் இயற்கை வண்ணங்களுடன் பொருந்துகிறது. வியாழக்கிழமைக்கு பளிச்சென்ற மஞ்சள். அந்தச் சட்டைகளில் அச்சிடுவதற்கான வடிவங்களை ஆசிரியர்களே உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அதனால் ஒவ்வோர் அச்சு வடிவத்துக்கும் தனித்துவமும் பொருளும் கிடைத்தன.

வெவ்வேறு நாள்களுக்கான இந்த மாற்றம் பள்ளியின் பண்பை வெளிப்படுத்துவதோடு, சீருடை அணிவதிலும் மாணவர்களுக்கு ஒரு புதுமையைத் தருகிறது. தங்களுக்குப் பிடித்ததையும் தினமும் அணிய வசதியானதையும் சிந்தித்துத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை மாணவர்களிடம் கொடுப்பதே இதன் அடிப்படை எண்ணம்.

இ. ஓர் எண்ணம் சீருடையாக உருவான விதம்

உயர்நிலை மற்றும் தொடக்க வகுப்புகளைச் சேர்ந்த ஆர்வமுள்ள மாணவர்கள் பள்ளியின் சீருடைக் குழுவில் இடம்பெற்றார்கள். சீருடையின் வடிவத்தை உருவாக்குவது, துணியைத் தேர்ந்தெடுப்பது, நிறங்களை முடிவுசெய்வது என்று முழுப் பொறுப்பையும் அவர்கள் ஏற்றனர். இந்தத் தேர்வுகள் ஒவ்வொன்றிலும் அவர்களின் படைப்பாற்றல் வெளிப்பட்டது.

சீருடை தயாரிப்பாளருடன் நெருங்கிப் பணியாற்றிய மாணவர்கள் தங்கள் வடிவங்களைப் பகிர்ந்தார்கள். ஒவ்வொரு நாளுக்குமான நிறங்களைத் தேர்ந்தெடுத்ததோடு, சீருடையில் அச்சிடுவதற்குத் தனிச் சின்னங்களையும் உருவாக்கினார்கள். மென்மையாகவும் காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணிச் சீருடைகளை வடிவமைத்தோம். இந்தச் சிந்தனையில் சம்ஸ்காராவின் கல்விப் பார்வையும் இருக்கிறது. ஆசிரியர்கள் வேர்கள்; குழந்தைகள் அந்த வேர்களில் வளரும் செடி. குழந்தைகளையும் ஆசிரியர்களையும் இணைக்கும் பாலம் சம்ஸ்காரா.

மாணவர்கள் தாங்களே இதில் இறங்கியதால் ஒவ்வொரு அம்சத்தையும் அறிந்துகொள்ள முடிந்தது. துணி தொட்டுப் பார்க்க எப்படி இருக்கிறது, அதன் நிறம் என்ன, உடலில் எப்படி அமைகிறது, அன்றாடப் பயன்பாட்டுக்கு என்ன தேவை என்று குழு ஆராய்ந்து முடிவுசெய்தது. சீருடை அழகாகவும் அணிந்து வேலை செய்ய வசதியாகவும் அமைந்ததில் அவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

சீருடையில் புதிதாகச் சேர்ந்தவை

இந்த ஆண்டு சீருடையில் இரண்டு புதிய அம்சங்கள் சேர்ந்தன.

  • மாணவிகளுக்கான ஸ்கோர்ட்: பலமுறை கலந்துபேசிய பிறகு, தொடக்க வகுப்பு மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவிகளுக்குப் பாவாடையும் அரைக்கால் சட்டையும் இணைந்த ‘ஸ்கோர்ட்’ சீருடையில் சேர்க்கப்பட்டது. அழகாகவும் அணிய வசதியாகவும் இருக்கும் இந்த உடையில் மாணவிகள் இயல்பாக அசையவும் சுதந்திரமாக நடமாடவும் முடியும்.
  • சம்ஸ்காரா ஹூடி: குறிப்பாகக் குளிர்காலத்திலும், பள்ளிக்கு வெளியே நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் போட்டிகளுக்கும் செல்லும்போதும், மாணவர்கள் வீட்டிலிருந்து வெவ்வேறு நிற ஜாக்கெட்டுகளை அணிந்து வந்தார்கள். அப்போது பள்ளிச் சீருடையின் ஒரே மாதிரியான தோற்றம் மறைந்துவிடும். எனவே புதிய சீருடையுடன் எளிமையான வடிவத்தில் ஹூடியையும் ஜாக்கெட்டையும் சேர்த்தோம். அளவான தடிமன் இருப்பதால் ஆண்டு முழுவதும் வசதியாக அணியலாம்.

ஈ. மாணவர்களின் படைப்பாற்றல் வெளிப்பட்ட விதம்

முதல் கலந்துரையாடலில் யோசனைகளைச் சேகரித்ததிலிருந்து இறுதி வடிவத்தை முடிவுசெய்தது வரை மாணவர்களே திட்டத்தை வழிநடத்திச் செயல்படுத்தினார்கள். ஒவ்வொரு மாணவரின் கருத்துக்கும் மதிப்பு இருந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் தங்கள் படைப்பாற்றலைக் காட்டிய அவர்கள், ‘இது நாங்கள் உருவாக்கியது’ என்ற உரிமையையும் பெருமையையும் பெற்றார்கள்.

அவர்கள் ஈடுபட்டதால், சீருடை இன்று மாணவர்களின் கூட்டு உழைப்பையும் படைப்பாற்றலையும் பள்ளியோடு அவர்களுக்கு இருக்கும் பிணைப்பையும் நினைவூட்டுகிறது. தாங்கள் வடிவமைத்த உடையை அணியும் பெருமையோடு, சேர்ந்து வேலை செய்யவும், வழியில் எழுந்த சிக்கல்களுக்குத் தீர்வு காணவும், தங்கள் தனிப்பட்ட ரசனையை மற்றவர்கள் பார்க்கக்கூடிய வடிவில் வெளிப்படுத்தவும் அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது.

உ. நிறைவாக

சம்ஸ்காரா அகாடமியில் சீருடையின் தோற்றம் மாறியதுடன், மாணவர்களின் படைப்பாற்றலுக்கும் பொறுப்புணர்வுக்கும், பள்ளி ஒரு சமூகம் என்ற உணர்வுக்கும் நாம் தரும் முக்கியத்துவமும் இந்த முயற்சியில் வெளிப்பட்டது. தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைச் சொல்லும் ஒன்றை வடிவமைக்கும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைத்தது. சேர்ந்து உழைப்பதும், எடுத்துக்கொண்ட வேலையைத் தங்களுடையதாகக் கருதுவதும், எதற்காக உருவாக்குகிறோம் என்பதை மனதில் வைத்துச் செயல்படுவதும் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் அனுபவத்தில் கற்றார்கள்.

புதிய சீருடைகளை அணியலாம். அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் மாணவர்கள் ஒன்றிணைந்து தங்கள் யோசனைகளுக்கு வடிவம் கொடுத்த கதையையும் நினைக்கலாம். அந்தப் பெருமையை நாம் அனைவரும் அணிந்துகொள்ளலாம்.